top of page
ALL INDIA
ASPIRING WRITER's
AWARD
NaveenKumar Surulivel
REGISTRATION ID
B1318
YOUR FINAL SCORE IS IN BETWEEN
9.15 - 9.75
IFHINDIA CONGRATULATE YOU FOR BEING IN THE TOP 10 FINALISTS.
1. THE TITLE WINNER SCORE MUST BE MORE THAN 9.70 WHO WILL BE WINNING 1,50,000/- CASH PRIZE & YOU MAY BE ONE OF THEM FOR SURE BECAUSE OUR FINAL WINNER IS IN BETWEEN THOSE TOP 10 FINALISTS INCLUDING YOU.
2. SINCE YOU ARE ONE OF THOSE TOP 10 FINALIST YOU WILL BE GETTING EXCLUSIVE GIFT COUPON WORTH 5000/- EACH
(Note : You must participate either in ONLINE EVENT or OFFLINE EVENT without fail to get your AWARD BENEFITS)
3. ALL TOP 10 FINALIST INCLUDING YOU MUST PARTICIPATE IN THE MEGA EVENT EITHER OFFLINE OR ONLINE BECAUSE EVEN YOU MAY BE THE ONE WHO WIN THE TITLE FOR SURE.
4. INCASE YOU ARE NOT WILLING TO PARTICIPATE IN THE MEGA EVENT/ AWARD CEREMONY EITHER OFFLINE OR ONLINE then your journey in the contest will end here. HOWEVER YOU WILL STILL RECEIVE THE BEST 25 WRITERS BENEFITS but you will not get any benefits for being in the TOP 10 incase you quit from the contest hereafter.
click on the below link to know more information about the FINAL ROUND
Written By
NaveenKumar Surulivel
மனிதனாக இருந்தும்
பலனில்லை
முருகேசன் கூலிக்கு சித்தாள் வேலை செய்து கொண்டிருப்பவன். கோட்டைமங்கலம் என்னும் கிராமத்தில் தன் மகளுடன் வாழ்ந்து வருகின்றான். இவனிற்கு வயது நாற்பத்தி ஐந்தை நெருங்கும். வயதிற்கு ஏற்ற முதுமையுடன் இருப்பான். வயசு வித்தியாசம் பாராமல் அனைவரிடமும் பண்பாக நடந்து கொள்வான்.எதார்த்தமானவன். எப்பொழுதும் தொள தொளவென்று இருக்கும் சட்டையையும் சாயம் வெளுத்த வேட்டியையுமே அணிந்து கொண்டு இருப்பான்.
இவனுடைய மகள் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கின்றாள். அவள் பெயர் திவ்யா. இவள் அச்சு அசல் அவள் அம்மாவை உரித்து வைத்திருப்பதால் முருகேசன் இவளை பவளம் என்று தான் அழைப்பான். பவளம் திவ்யாவிற்கு இரண்டு வயதாக இருக்கும் பொழுதே உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டாள்.
முருகேசனிற்க்கும் திவ்யாவிற்கும் ஒருவரை ஒருவரை தவிர வேறு எந்த சொந்தமும் கிடையாது.
முருகேசன் கடுமையாக உழைக்க கூடியவன். கூலி வேலை செய்து வந்தாலும் தன் மகளிற்கு அம்மாவைப் பற்றிய கவலைகள் எழாதவாறு சந்தோஷமாக பார்த்துக் கொள்வான். மேலும் இப்போதிலிருந்தே அவள் பெயரில் நகைக்கான சீட்டு பணத்தையும் கட்டி வருகின்றான். காலை ஒன்பது மணிக்கு வேலைக்குச் சென்றால் மாலை ஏழு மணிக்கு தான் வீடு திரும்புவான். தினமும் வேலை முடித்து வீடு திரும்பும் போது தன் மகளிற்கு தெரு ஓரங்களில் விற்கும் தின்பண்டங்கள் மற்றும் எண்ணெயில் வறுத்தெடுத்த பொருட்கள் என அவள் ஆசைப்படும் அனைத்தையும் வாங்கிவருவதை வழக்கமாகவும் வைத்திருந்தான். முருகேசனின் தலையில் வைரங்களால் ஆன 'மகுடம்' இல்லை என்றாலும் ஒரு "ராஜாவைப்" போல தன் மகளின் ஆசையை எப்பொழுதும் நிறைவேற்றி வந்தான்.
முருகேசன் திவ்யாவை பிறந்தது முதல் இப்பொழுது வரை அதட்டியது கூட கிடையாது. ஏன் அவளிற்கு ஏதாவது சிறு 'காய்ச்சல், தலைவலி' ஏற்பட்டால் கூட தன் கண்ணை கசக்கி கொள்ளும் அளவிற்கு அவள் மீது அதீத பாசம் வைத்திருந்தான்.
இப்பொழுது மே மாதம். கோடை விடுமுறையில் மாணவர்கள் உற்சாகத்துடன் இருந்தனர். இதற்கு முன் ஊரில் இருந்த அமைதி இப்பொழுது துளிஅளவும் இல்லை. சிறுவர் சிறுமியர்கள் வெயில் என்று பாராமல் ஓடுவதும் ஆடுவதும் பாடுவதும் இளைஞர்கள் ஊரின் நடுவே மட்டைப்பந்து விளையாடுவதும் என ஊரே ஜே ஜே என்று இருந்தது.
திவ்யாவும் அவளுடைய நண்பர்களுடன் சேர்ந்து டப்பா டான்ஸ், ஒளிஞ்சி பிடிச்சு, திருடன் போலீஸ், கோ கோ, அரபீடி போன்ற விளையாட்டுக்கள் விளையாடுவாள். காலையில் சாப்பிட்டு விட்டு விளையாட கிளம்பினால் மாலையில் தான் வீடு திரும்புவாள். மேலும் எப்பொழுதாவது அண்ணன் அக்காக்களுடன் சேர்ந்து கூட்டாஞ்சோறும் செய்து சாப்பிட்டு சந்தோசமாக விடுமுறையை அனுபவித்துக் கொண்டிருந்தாள்.
மேலும் மே மாதத்திற்குரிய முக்கிய சிறப்புகள் என்றாலே ஊர் திருவிழாக்கள் தான். ஆம் மே மாதம் என்றாலே ஆங்காங்கே ஊர் திருவிழாக்களும் அதில் எண்ணற்ற கடைகளும், இசைக்கச்சேரிகளும், ஆடலும், பாடலும் என ஊரே ஆரவாரமாக இருப்பது வழக்கமே. அதுபோல கோட்டைமங்கலம் கிராமத்தில் இருந்து இருபது கிலோமீட்டர் தொலைவில் பட்டணத்தில் அமைந்துள்ள மாரியம்மன் கோயிலிலும் வருடம் தவிராமல் திருவிழா கோலாகலமாக ஏழு நாட்கள் நடைபெறும். அந்த வட்டத்தில் இருக்கும் அனைத்து ஊர் மக்களும் குடும்பத்துடன் சென்று மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள். அதுபோல கோட்டை மங்கலத்தில் இருக்கும் ஊர் மக்களும் குடும்பம் குடும்பமாக சென்று கொண்டாடி வந்தனர். ஆனால் முருகேசனுக்கு தன் மனைவி இறந்ததிலிருந்து கடவுள்மீது வைத்திருந்த நம்பிக்கை முற்றிலும் மறைந்து விட்டதால் அவன் திருவிழாவிற்கு செல்லாமல் இருந்தான். திருவிழாவும் சிறப்பாக நடந்து முடியும் தருவாயில் இருந்தது;
ஆனால் அது நாள் வரை திருவிழாவை பற்றி அறியாதிருந்த திவ்யாவிற்கு தன் நண்பர்கள் அவரவர் குடும்பத்துடன் வெளியூர் சென்று வருவதையும் வரும்பொழுது அவர்கள் கையில் புது புது விளையாட்டு பொருட்கள் வைத்திருப்பதையும் கவனித்தாள்.
பின் திவ்யாவின் நண்பர்கள் அவளிடம், தாங்கள் தங்கள் குடும்பத்துடன் பட்டணத்தில் உள்ள கோவில் திருவிழாவிற்கு சென்று வந்ததையும் பெரிய பெரிய ராட்டினங்கள் சுற்றியதையும் சுவையான தின்பண்டங்கள் சாப்பிட்டதையும் பற்றி பெருமையாக சொல்லிக் கொண்டிருந்தனர். அவர்கள் சொல்வதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த திவ்யாவிற்கும் திருவிழாவிற்கு செல்ல வேண்டும், ராட்டினம் சுற்ற வேண்டும், தின்பண்டங்கள் சாப்பிட வேண்டும் என்ற ஆசை அவளிடம் அணு ஆயுதங்களை விட வேகமாக பாய்ந்தது. மேலும் அவள் நண்பர்கள், நாளையுடன் திருவிழா முடிவடைவதையும் சுட்டி காட்டினார்கள். அவள் எப்படியாவது அப்பாவுடன் திருவிழாவிற்கு செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டாள். அப்போது அவள் மனதில் ஒரு சிறு பயம் தோன்றியது. தேர்வில் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவருக்கு உள்ள அதே பயம், தான் இந்த தேர்விலும் முழுமதிப்பெண் பெறுவேனா என்பதுபோல். அதாவது அப்பா சாமி கும்பிடமாட்டார் என்பதால் தன்னை திருவிழாவிற்கு கூட்டி செல்லவில்லை என்றால் என்ன செய்வது என பதற்றத்துடன் அப்பாவின் வருகைக்காக காத்திருந்தாள்.
சூரியனும் தன்னுடைய வேலை நேரம் முடிந்து விட்டது என்பது போல் ஊர் மக்களிடம் 'டாட்டா பாய் பாய்'என்று சொல்லிவிட்டு மறைந்தது. முருகேசனும் வீடு வந்து சேர்ந்தான். அவள் எப்போதும் முருகேசன் வந்ததும் அவனிடம் இருக்கும் தின்பண்டங்களை வாங்குவதற்கு தான் ஆர்வமாக இருப்பாள். ஆனால் அன்று தின்பண்டங்களை வாங்கி ஓரமாக வைத்துவிட்டு அவனிடம் "அப்பா நம்ம ஊர்ல இருந்து எல்லாரும் கோவில் திருவிழாக்கு போயிட்டு விளையாட்டு சாமான்லாம் வாங்கிட்டு வராங்க , மைதிலி, கண்மணி, குமாருலாம் கூட திருவிழாக்கு போயிட்டு வந்துட்டாங்க தெரியுமா. நாளையோட வேற திருவிழா முடியுதான் அதுனால என்னையும் கூட்டிட்டு போப்பா ப்ளீஸ்" என்று அப்பாவியாக கேட்டாள். அவன் என்று அவள் கேட்டு இல்லை என்று மறுத்திருக்கின்றான். அதனால் அவளின் அப்பாவி தனத்தை ரசித்துக்கொண்டே எதைப் பற்றியும் யோசிக்காமல் சரி என்று கூறி விட்டான். திவ்யாவின் பதற்றமும் ஒரே வினாடியில் சுக்குநூறாக உடைந்தது. இதற்காகவா இவ்வளவு பயந்தேன் என்று தன்னையே திட்டிக் கொண்டாள்.
பிறகுதான் முருகேசனுக்கு ஞாபகம் வந்தது நாளை ஞாயிற்றுக்கிழமை என்றாலும் ஓனர் தன்னை வேலைக்கு வர சொல்லி இருந்தார் என்பது.
உடனே அவரிடம் நேரில் சென்று தனது விடுமுறையை கூறி செலவிற்கு தன் சம்பளப்பணத்தை கேட்டான். ஆனால் அவரோ நாளை அவனை விட்டால் வேறு பணியாட்கள் இல்லை என்பதை கூறி அவனைக் கட்டாயம் நாளை பணிக்கு வரச் சொல்லி அவன் விடுமுறையை மறுத்து விட்டார். "வேண்டுமானால் திங்கட்கிழமை விடுமுறை எடுத்துக் கொண்டு நாளை வேலை முடிந்த பிறகு பணத்தை வாங்கிக் கொள்" என்று கூறினார். முருகேசன் எவ்வளவு கூறியும் அவன் வார்த்தையை மறுத்து விட்டார். பின் முருகேசனால் அவரின் வார்த்தையை மறுத்து பேச முடியவில்லை. தயக்கத்துடன் வீடு திரும்பினான்.
திவ்யா சந்தோஷமாக தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது முருகேசன் அவளிடம் மெதுவாக "பவளம் நம்ம திருவிழாவுக்கு திங்ககிழமை போலாமா தாயி. நாளைக்கு ஓனரு வேலைக்கு கண்டிப்பா வர சொல்லிட்டாரு தாயி" என்று அவன் சொல்லியவுடன் அவள் கண்களிலிருந்து நீர் வழிய ஆரம்பித்துவிட்டது. பின் முகத்தை சுழித்துக் கொண்டு "போப்பா, நாளைக்கே போலாம் பா ப்ளீஸ். நீ மட்டும் என்ன கூட்டிட்டு போலேனா நான் உன்ட்ட பேசவே மாட்டேன் எப்பயும்" என்று அழுதுகொண்டு கூறினாள். முருகேசனுக்கு அவளின் கண்ணீரை பார்த்ததும் என்ன செய்வதென்று தெரியாமல் "சரி நாளையே போலாம்" என்று திவ்யாவிற்கு வாக்கு கொடுத்தான். பின் பக்கத்து வீட்டு ஆறுமுகத்திடம் சென்று"ஆயிரம் ரூபாய்" கடன் கேட்டான். ஆனால் அவன் தன்னிடம் இவ்வளவு தான் இருக்கிறது என்று"ஐநூறு" ரூபாயை மட்டும் கொடுத்தான்.
காலையில் பொழுதே எந்திரித்து விறு விறு என்று கிளம்பி பின் தன் மகளையும் கிளப்பினான். மஞ்சள் பூசிய முகத்திற்கு மேல் மொத்த பவுடரையும் அப்பி, தலையை வாரி இரட்டைச் சடையையும் போட்டு விட்டான். ஒரு கட்டப்பையில் இரண்டு லிட்டர் வாட்டர் கேனில் தண்ணீரை நிரப்பி உள்ளே வைத்தான். பின் ஒரு துண்டையும் எடுத்துக் கொண்டான். அந்தக் கோவில் தங்கள் ஊரில் இருந்து இருபது கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதால் பேருந்தில் தான் செல்ல வேண்டும். அதனால் அப்பனும் மகளும் பேருந்து நிறுத்தத்திற்கு சைக்கிளில் கிளம்பினர். அங்கு சைக்கிளை தெரிந்த கடையில் போட்டுவிட்டு பேருந்திற்காக காத்திருந்தனர்.
இது பிரம்மன் வகுத்த நியூட்டன் எழுதப்படாத விதிகளில் இதுவும் ஒன்று எனக் கூறலாம் நாம் பேருந்து நிறுத்தத்தில் நிற்கும் பொழுது நமக்கு எதிர் திசையில்தான் பேருந்து வந்து வந்து போகும் என்பது. நீ....ண்ட நேரத்திற்கு பிறகு பத்து மணி அளவில் தனியார் பேருந்து ஒன்று வந்தது. மற்ற நேரங்களில் ஈ க்கு கூட தனி இருக்கையை கொடுத்து பயணச்சீட்டு இல்லாமல் இலவசமாக கூட்டிச் செல்வார்கள். ஆனால் இன்று திருவிழாவிற்கு செல்லும் மொத்த கூட்டமும் அந்த பேருந்தில் தான் இருக்கும் போல அவ்வளவு கூட்டம். முருகேசனும் திவ்யாவும் பின் கதவின் வழியே ஏறிக்கொண்டனர். கூட்டத்துடன் கூட்டமாக பயணச்சீட்டையும் பெற்றுக் கொண்டனர். பேருந்தின் ஓட்டுனரும் நடத்துனரும் இதுதான் தங்களுக்கு உரிய நேரம் என எண்ணி ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்திலும் ஆட்களை ஏற்றி குவித்துக் கொண்டிருந்தனர். பேருந்தில் இருந்த ஒரு சில பேர் ஓட்டுனரையும் நடத்துனரையும் வசப்பாடி கொண்டும் இருந்தனர். பேருந்தில் இருந்த ஒலிபெருக்கியின் எழும் பாட்டிற்கு ஏற்ப. அரை மணி நேரம் கழித்து கோவிலின் பஸ் நிறுத்தத்தில் பேருந்து நின்றது. பின் மணப்பெண் தன் குடும்பத்தினை பிரிந்து செல்வது போல் பேருந்துமட்டும் தனியாக வெறிச்சோடி கிளம்பியது.
முருகேசன் பேருந்தில் இருந்து இறங்கியவுடன் மீண்டும் ஒரு சுதந்திரத்தை அனுபவித்தான். பின் அரை பாட்டில் தண்ணீரை ஒரேமடக்கில் குடித்து விட்டு மீத தண்ணீரை தேவைப்படும் என்று வைத்து விட்டான். பிறகு ஒரு கையில் திவ்யாவையும் மறுக்கையில் கட்டை பையையும் பிடித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தான். திவ்யாவிற்கு இதுபோன்ற கூட்டத்தை பார்ப்பது இதுவே முதல் முறையாகும். அன்று திருவிழாவின் கடைசி நாள் என்பதால் மக்கள் கூட்டம் 'பெரும் வெள்ளம்' போல் காட்சி அளித்தது. திவ்யா தெருக்களில் இருக்கும் கடைகளையும் கடைகளின் உள்ளே விறுவிறுப்பாக வேலை செய்து கொண்டிருக்கும் ஆட்களையும் வேடிக்கை பார்த்துக்கொண்டே நடந்து வந்தாள். அவள் பார்க்கும் ஒவ்வொன்றும் அவளுக்கு புதிதாக தெரிந்தது. மக்கள் 'உருமி,பறை' இசையுடன் அக்னி சட்டியை கையில் ஏந்தி கொண்டு கோவிலுக்குள் செல்வதையும் கண் சிமிட்டாமல் ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தாள். அந்த இசை கேட்போர்கே அருள் வந்துவிடும் போல் இருந்தது. சிறிது நேரம் விட்டிருந்தால் திவ்யாவே அருள் வந்து ஆடி இருப்பாள் அம்மனாக. அவர்கள் சிறிது தூரம் நகர்ந்த பின் கோவிலின் நுழைவாயிலிற்கு வந்தடைந்தனர்.
அந்த நுழைவாயிலில் முதியவர்கள், பார்வை இல்லாதவர்கள் மற்றும் உடல் ஊனமுற்ற ஒரு சில பேர் என மொத்தம் பத்து பேர் கையேந்தி தானம் கேட்டு இருந்தனர். முருகேசன் அவனிடமிருந்த இருபது ரூபாய் சில்லறையை எடுத்து திவ்யாவிடம் கொடுத்து அனைவருக்கும் இரண்டு ரூபாய் கொடுத்து வருமாறு சொன்னான். அவளும் அனைவருக்கும் கொடுத்தாள். அவர்கள் அனைவரும் அவளை ஆசீர்வாதமும் செய்தனர்.
பிறகு முருகேசன் திவ்யாவிடம்" பவளம் இந்த ஒரு விஷயத்தை உன் மனசுல எப்பயும் வச்சுக்க நம்ம கிட்ட யாராவது உதவின்னு கேட்டாங்கன்னா அவங்களுக்கு நம்மளால முடிஞ்ச உதவி செஞ்சுடனும். மத்தவங்களுக்கு உதவுறதுக்கு நம்ம மன்னனா இருக்கணும்ன்றது இல்ல மனுசனா இருந்தாலே போதும்" என்று சொல்லிக் கொண்டே கோயிலின் உள்ளே சென்றனர். அப்போது திவ்யாவிற்கு அவளின் நண்பர்கள் கூறியது அவளின் காதுகளில் ஒலிக்கத் தொடங்கின. அதை கண் இமைக்காமல் கவனிக்கவும் தொடங்கினாள். விண்ணை தொடும் ராட்டினம், கப்பல் போன்ற ராட்டினம், டீ கப்புகள் போன்ற ராட்டினம், தலைகீழாக சுற்றும் ராட்டினம், சிறுவர்களுக்கென கார் பைக் போன்ற ராட்டினம், மேலும் ஒரு விளையாட்டு இடத்தில் சிறுவர்கள் குதித்து குதித்து ஆனந்தமாக விளையாடி கொண்டு இருந்தனர். திவ்யாவிற்கு அவற்றையெல்லாம் பார்த்த பிறகு தான் புரிந்தது இவையனைத்தும் தன் நண்பர்கள் கூறியதை விட மிக பிரம்மாண்டமாக இருந்தது என்று.
கோவிலில் சாமியை பார்க்கும் வரிசை கடல் போல் நீண்டு இருந்தது. இருந்தும் முருகேசனும் திவ்யாவும் வரிசையில் நின்று நீண்ட நேரத்திற்கு பிறகு சாமியை பார்க்க உள்ளே சென்றனர்; அனைவரும் அம்மனை கையெடுத்து கும்பிட்டுக் கொண்டு வழிபட்டுக் கொண்டிருந்தனர் திவ்யா உட்பட. ஆனால் முருகேசன் மட்டும் கையெடுத்து கும்பிடாமல் அம்மனிடம்"நான் அன்னைக்கு அவ்வளவு கேட்டும் நீ என் பவளத்தை என்கிட்ட இருந்து எடுத்துகிட்ட பரவால்ல நீயாவது சந்தோசமா இரு. அதே மாதிரி அவளையும் சந்தோஷமா வச்சிரு."
அம்மன் சிரித்துக் கொண்டிருந்தாள்.
"இன்னைக்கு இந்த பவளத்துக்காவது உன்னோட அருளும் ஆசீர்வாதத்தையும் கொடு. அதையும் மீறி அவளுக்கு கஷ்டத்தை கொடுக்கணும்னா அதை எனக்கே கொடு"என்று மனதாரம் தன் கருத்தினை தெரிவித்துக் கொண்டிருந்தான்.
பிறகு அம்மனைப் பார்த்துவிட்டு வெளியே வந்தனர். வெளியில் வந்தவுடன் ராட்டினத்தில் ஏற போவதை எண்ணி மிகவும் உற்சாகத்துடன் இருந்தாள் திவ்யா. ராட்டினத்தின் அருகில் வந்தனர். சாமியை பார்க்கும் கூட்டத்தை விட ராட்டினத்தில் ஏறும் கூட்டம் தான் அலைமோதியது. திவ்யா முருகேசனிடம் வான் அளவு உயரத்தில் இருக்கும் 'ஜெயின்ட் வில்' ராட்டினத்தை கைகாட்டி இதிலே போக வேண்டும் என்று தன் ஆசையை கூறினாள். முருகேசன் முட்டி மோதி இரண்டு டிக்கெட்டை வாங்கி உள்ளே சென்று இருக்கையில் ஒருவழியாக அமர்ந்தான். அப்போது திவ்யாவை போல் ஒரு சிறுமி தனியாக நின்று ஏக்கத்துடன் ராட்டினத்தில் ஏறுபவர்களை..யே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளை பார்க்கும் போதே தெரிந்தது அவள் அந்த இடத்திற்கு புதிது இல்லை என்று. முருகேசன் அவளிடம் "நீ ராட்டினத்தில் சுற்றுகிறாயா" என்று 'சைகையில்' கேட்டதற்கு அந்த குழந்தை சிரித்தபடி 'தலையாட்டியது' தலையாட்டும் பொம்மை போல. உடனே முருகேசன் வெளியே சென்று அந்த குழந்தையை திவ்யாவின் அருகில் உட்கார வைத்தான். திவ்யா அந்த குழந்தையை பார்த்து சிரித்தாள் பதிலுக்கு அவளும் சிரித்தாள்.பிறகு ராட்டினம் மெதுவாக மேலே ஏறியது. ராட்டினம் மேலே உயர உயர திவ்யாவிற்கு மொத்த பட்டணமும் கழுகு பார்வையை போல் தெரிந்தது. அந்தக் காட்சியை ஆனந்தத்துடன் பார்த்தாள். ஆனால் ராட்டினம் மேலிருந்துகீழே இறங்கும் பொழுது அவளின் அடி வயிற்றில் உந்துதல் ஏற்பட அருகில் இருக்கும் அந்தச் சிறுமியின் கையை இறுக்க பிடித்துக் கொண்டு கண்ணையும் இறுக்க மூடிக்கொண்டாள். பின் ராட்டினம் வேகமாக சுற்ற ஆரம்பித்தது. ஆனால் அந்த சிறுமிக்கு ஒரு துளி அளவும் பயம் இல்லை; ஆனந்தமாக அனுபவித்தாள். முருகேசன் திவ்யாவையே பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் அவள் ராட்டினம் சுற்றி நின்ற பிறகுதான் கண்ணையே திறந்து பார்த்தாள். அதிலிருந்து இறங்கி வந்த பின் அனைத்து கட்சிகளும் தங்களுக்கென்ற ஒரு கொள்கையை வகுத்துக் கொள்வது போல திவ்யாவும், தான் ராட்டினத்தில் இனி எப்பொழுதும் ஏறப்போவதில்லை என்ற கொள்கையை வகுத்துக்கொண்டாள். பின் அந்த சிறுமி முருகேசனிடம் தன் புன்னகையை காண்பித்து விட்டு ஓடிவிட்டாள்.
அடுத்து முருகேசனும் திவ்யாவும் ‘டெல்லி அப்பளம்’,’காலிஃப்ளவர்’ என அனைத்தையும் வயிறு நிறைய சாப்பிட்டனர். காலிஃப்ளவர் குறைவாக இருந்தாலும் விலை தான் சற்று மலை போல் இருந்தது. பிறகு அங்கிருந்து கிளம்பி விளையாட்டுப் பொருள்கள் வாங்க செல்லும் போது இடையில் ஒருவர் குல்பி விற்றுக் கொண்டிருந்தார். திவ்யா அது வேண்டும் என்று கேட்டாள். முருகேசனும் அதை வாங்கி கொடுத்தான். அப்போது முருகேசனிடம் 'இருநூறு ரூபாய்' மட்டும் தான் மீதம் இருந்தது. பிறகு மீதி சில்லறையை குல்பி கடைக்காரர் முருகேசனிடம் கொடுத்தார் முருகேசன் அதை பார்க்காமல் தன் பாக்கெட்டில் வாங்கி வைத்துக் கொண்டான். அதன் பிறகு விளையாட்டுப் பொருட்கள் விற்கும் இடத்திற்கு வந்தனர். அங்கு கலர் கலராக வளையல்களும் வைத்திருந்தனர். அதைப் பார்த்ததும் திவ்யாவிற்கு 'வளையல்களை' வாங்கி கொடுத்தான். திவ்யா அந்த வளையல்கள் தன் கையில் போட்டு முகத்தின் அருகில் வைத்து "எப்படி இருக்கு பா" என்று முருகேசனிடம் கேட்டதற்கு, முருகேசனுக்கு கண்களில் சிறிது நீர் தேங்க, அச்சு அசல் அவனுக்கு பவளத்தை பார்ப்பது போலவே இருந்தது. அதன்பின் திவ்யா விருப்பப்பட்டு ஒரு சிறிய 'கரடிபொம்மையை' வாங்கினாள். இரண்டு பொருள்களையும் சேர்த்து என்பது ரூபாய் என்றான் கடைக்காரன். முருகேசன் தன் பாக்கெட்டில் இருந்து 'நூறு' ரூபாயை எடுத்து கடைக்காரரிடம் கொடுத்தான். ஆனால் அந்த ரூபாய் பாதிக்கும் மேல் கிழிந்து இருந்தது என்பதால் முருகேசன் இடமே திரும்பி கொடுத்து விட்டான் அந்த கடைக்காரன். முருகேசனிடம் அந்த நூறு ரூபாயை தவிர மீதம் என்பது ரூபாய் மட்டும் தான் இருந்தது. மகளின் ஆசை என்பதனால் அந்த என்பது ரூபாயையும் கடைக்காரரிடமே கொடுத்துவிட்டார். மீதம் அவரிடம் அந்த கிழிந்த நூறு ரூபாய் மட்டும் தான் இருந்தது. உடனே முருகேசன் அந்த குல்பி கடைக்காரரை தேடினான். ஆனால் அவர் அங்கு இல்லை. முருகேசன் தன்னிடம் வேறு பணம் இருக்கிறதா என்றும் பார்த்தான் ஆனால் அவனிடம் அந்த ‘கிழிந்த ரூபாயை’ தவிர வேறு எந்த பணமும் இல்லை. அவன் பேருந்தில் செல்ல வேண்டும் என்பதால் அந்த கிழிந்த பணத்தை எப்படியாவது இங்கு மாற்றி விட வேண்டும் என்று நினைத்தான். அதனால் நிறைய கடைகளில் உண்மை நிலையை எடுத்துக் கூறி அந்தப் பணத்தை மாற்ற நினைத்தான் இருந்தும் அவனுக்கு பலன் அளிக்கவில்லை. அந்த ரூபாய் நோட்டு அளவுக்கு அதிகமாக கிழிந்து இருந்தது; அதன் மேல் டேப்பும் ஒட்டப்பட்டிருந்தது. பிறகு முருகேசன் அந்த டேப்பை நன்றாக ஒட்டினான். பிறகு உண்மையை கூறினால் கிடைக்கவில்லை என்பதனால் வேறு ஒரு சிறிய பொருளை வாங்குவதன் மூலம் இவற்றை மாற்றி விடலாம் என எண்ணி வேறு பொருள் வாங்க சென்றான். ஆனால் எங்கும் அவன் எண்ணம் பழிக்கவில்லை.
ஆனால் ஒரு கடையில் இவனைப் போல அவரும் அதை பார்க்காமல் வாங்கி கல்லாவில் போட்டுவிட்டார். முருகேஷனிர்க்கு பாதி உயிர் வந்து விட்டது; ஆனால் மீதி உயிர் கடைக்காரரின் கையில் ஊசலாடிக் கொண்டிருந்தது. இவனுக்கு மீதி சில்லறையை கொடுப்பதற்காக ரூபாயை எண்ணி கொண்டிருந்தார். முருகேசனுக்கு பதற்றமாக இருந்தது எதும் கண்டுபிடித்து விடுவாரோ என்று. அந்தக் கடைக்காரர் மீது உயிரையும் முருகேசன் இடம் கொடுத்ததும் முருகேசன் திவ்யாவின் கையை இறுக்க பிடித்துக் கொண்டு வேகமாக நடக்க ஆரம்பித்தான். ஆனால் நாலு எட்டு எடுத்து வைத்து ஐந்தாவது எட்டு முடிக்கும் பொழுது முருகேசன் நினைத்தபடியே அவனை வழிமறித்து அந்த கடைக்காரர் நூறு ரூபாய் கிழிந்து இருப்பதை சுட்டிக்காட்டி விட்டு அவனுடைய மீதச் சில்லறையையும் அந்த பொருளையும் திரும்ப வாங்கிக் கொண்டு சென்றார்.
முருகேசனுக்கு என்ன செய்வது என்று ஒன்றும் புரியவில்லை. அந்தக் கிழிந்த ரூபாயை வைத்து யோசித்துக் கொண்டிருந்தான்.அப்போது தூரத்தில் அந்த குல்பி கடைக்காரரை பார்த்தான். முருகேஷனுக்கு தன் வாழ்க்கையில் ஏதோ ஒளிவட்டம் தெரிவது போல் இருந்தது. திவ்யாவை அங்கேயே விட்டுவிட்டு அந்தக் கூட்டத்தில் வேகமாக குல்பி கடைக்காரரிடம் ஓடினான். ஆனால் அங்கு சென்று பின் தான் தெரிந்தது அது அந்த கடைக்காரர் இல்லை என்று. பிறகு அந்த குல்பி கடைக்காரரிடமும் அந்த நூறு ரூபாயை மாற்ற முயற்சித்தான் ஆனால் முடியவில்லை. பிறகு சோர்ந்து போய் சோகமாக திவ்யாவை நோக்கி திரும்பினான். அந்த இடத்தில் அவள் இல்லை. அந்த ஒரு வினாடி அவனுடைய இதயத்துடிப்பு படபட..வென்று அடித்தது, மூச்..சு வாங்க ஆரம்பித்தது. அவ்வளவு பெரிய கூட்டத்தின் சத்தத்திலும் அவனுடைய இதயத்துடிப்பின் சத்தம் மட்டும் அதிகமாக அவன் காதுகளில் கேட்டது. பின் அவன் கீழே பார்த்தான் திவ்யா வயிற்றைப் பிடித்துக் கொண்டு கீழே அமர்ந்திருந்தாள். முருகேசன் " பவளம் பவளம்.. "என்று கத்திக் கொண்டே அவள் இருந்த இடத்தின் அருகில் ஓடி வந்தான். திவ்யா வயிற்று வலியால் துடித்துக் கொண்டிருந்தாள். முருகேசன் அவள் அருகில் வந்த பின்பு தான் தெரிந்தது, அவள் ‘ஆளாகி’ இருந்தால் என்பது. திவ்யாவின் கால்களின் வழியே ரத்தம் வடிந்து கொண்டிருந்தது;கூட அவள் கண்ணீரும். முருகேசனுக்கு என்ன செய்வதென்று ஒன்றும் புரியவில்லை. அவள் வலியால் துடிதுடித்ததை கண்டு அவன் கண்களில் இருந்து நீர் தானாக பெருக்கெடுத்து ஓடியது. அவளை அங்கிருந்து ஓரமாக கூட்டிச்சென்று உட்கார வைத்தான். யாரிடம் உதவி கேட்பது என்று அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. சுற்றி முற்றி பார்த்தான் அவனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. மக்கள் கூட்டம் கடல் போல் இருந்தும் தெரிந்த முகங்கள் என யாருமில்லை. அப்போது அருகில் ஒரு காலண்டரில் அம்மன் முகத்தைப் பார்த்து “ எனக்கு இங்க உன்னை தவிர வேற யாரையும் தெரியாது, தயவு செஞ்சு எனக்கு ஏதாவது உதவி பண்ணு” என்று கைகூப்பி கெஞ்சி அழுதான். அதில் அம்மன் சிரித்துக்கொண்டு இருந்தாள். முருகேசன் அழுவதை கண்ட திவ்யாவும் அழுதுகொண்டு தன் வயிற்றை கையால் இறுக்கி பிடித்துக்கொண்டு குருகி போயிருந்தாள். திவ்யாவின் பாவாடை முழுவதும் செந்நிறமாக மாறியது. முருகேசன் தான் வைத்திருந்த துண்டை அவள் மடியின் மீது போர்தி விட்டு திவ்யாவிடம்"பவளம் கொஞ்சம் வலிய பொருத்துக்க தாயி, நீ இங்கேயே இரு அப்பா போய் மெடிக்கல்ல உனக்கு மருந்து வாங்கிட்டு வந்துடறேன்"எனக்கூறி அங்கிருந்து வேகமாக கோவிலுக்கு வெளியே ஓட்டம் பிடித்தான். முருகேசனுக்கு நீச்சல் தெரியாது இருந்தும் தத்தளித்து சென்றான் அந்த கடல் போன்ற கூட்டத்தில். வெளியில் நிறைய கடைகள் இருந்தன. ஆனால் மெடிக்கல் ஷாப் மட்டுமில்லை. தேடினான் ஒரு மெடிக்கல் ஷாப் தொலைவில் இருந்தது. அதை அப்பொழுதுதான் அதன் உரிமையாளர் திறந்து பூஜை செய்து கொண்டிருந்தார். முருகேசன் வேகமாக அங்க ஓடினான்.ஆனால் அந்த கடையின் உரிமையாளர் சாமி கும்பிட்டுக் கொண்டு இருந்தார். சற்றும் தாமதிக்காமல் முருகேசன் பதறிக்கொண்டு“ஐயா ஐயா..” என்று கூச்சலிட்டான். அந்த சத்தத்தை கேட்ட கடைக்காரர் சற்று எரிச்சல் அடைந்து பின் சாமி போட்டோவின் அருகில் உள்ள உண்டியலில் ஐம்பது ரூபாய் காணிக்கையை செலுத்திவிட்டு இவனிடம் வந்தார்.
முருகேசன் கண் கலங்கி கொண்டு நாப்கின் மற்றும் வயிற்று வலி மாத்திரையையும் அவரிடம் வாங்கினான்.அப்போது முருகேசன் தன்னிடம் இருந்த அந்த நூறு ரூபாய் நோட்டை கடைக்காரரிடம் கொடுத்தான். ஆனால் அதை அவர் வாங்கவில்லை. முருகேசன் முதல் வாடிக்கையாளர் என்பதனால் கடைக்காரர் அதை வாங்க மறுத்தார். முருகேசன் மட்டுமில்லை அவனுடைய கண்ணீரும் எவ்வளவு கெஞ்சியும் கடைக்காரர் அதை புரிந்து கொள்ளவில்லை. அந்த கடைக்காரரை பொறுத்தவரை முதல் போனியை பொறுத்தே அந்த நாள் முழுவதும் இருக்கும் என்ற மனக்கணக்கை பட்டப் படிப்புடன் சேர்த்தும் அறிந்து வைத்திருந்தார். முருகேசனுக்கு என்ன செய்வது என்று ஒன்றும் புரியவில்லை. கோவிலுக்குள் செல்லும் ஒரு சில மக்கள் திவ்யாவை பார்த்தும் பார்க்காதது போல் சென்றனர்; இன்னும் ஒரு சில பேர் முகம் சுளித்தும் கொண்டனர்; மேலும் ஒரு சில பேர் தங்களுக்குள்ளும் கருணையின் ஈரம் இருக்கிறது என்று ஞாபகப்படுத்தும்படி திவ்யாவை பார்த்து தங்கள் வாயின் உள்ளே “ச்சு”கொட்டியும் கொண்டனர். அப்போது ஒரு பெண் ஒருத்தி திவ்யாவின் அருகில் சென்று அவள் கையில் வைத்திருந்த ‘கரடி பொம்மையை’ எடுத்து விட்டு பதிலாக ‘எலுமிச்சை பழத்தை’வைத்துவிட்டு அவளிடம் “அப்பா அம்மா எங்க போயிருக்காங்க கண்ணு” என்று கேட்டதற்கு, கண்ணைத் திறந்தால் வலி அதிகரிக்கும் என்பதை உணர்ந்த திவ்யா கண்ணை இறுக்கி மூடிக் கொண்டே “அப்பா மருந்து வாங்க போயிருக்கா..” என்று மீதியை முழுங்கினாள். அவளின் வலியை உணர்ந்த அந்த பெண் தான் வைத்திருந்த திருநீரை திவ்யாவின் நெற்றியில் பூசி விட்டு அவளுக்காக வேண்டியும் கொண்டாள்.
முருகேசன் தன்னந்தனியாக அனைத்தையும் இழந்தவன் போல் செய்வதறியாமல்நின்று கொண்டிருந்தான். பின் ஏதோ ஞானம் வந்தது போல் வேகமாக அந்த “நூறு”ரூபாய் நோட்டை எடுத்துக்கொண்டு நுழைவாயிலுக்கு ஓடி வந்தான். அங்கு இருந்த ஒரு ‘பார்வை இல்லாதவரிடம்’அந்த “நூறு”ரூபாய்க்கு சில்லறை கேட்டான். அவரிடம் கேட்க அவனுக்கு மனம் வரவில்லை, இருந்தும் வேறு வழியின்றி, மனதை சிறுகல்லாக்கி கொண்டு அவரிடம் கேட்டான். அந்தப் ‘பார்வை இல்லாதவர்’அந்த பணத்தை முதலில் தடவி பார்த்துவிட்டு பின் வாங்கி வைத்துக்கொண்டார். முருகேசனுக்கு மீண்டும் உயிர் போ..ய் உயிர் வந்தது. ‘பார்வை இல்லாதவர்’ தன்னிடம் இருந்த மொத்த சில்லறையையும் தேடி கண்டுபிடித்து எடுத்தார்.ஆனால் அதில் மொத்தம் “ 90” ரூபாய் தான் அவரிடம் இருந்தது;மீதம் பத்து ரூபாயை அருகில் அமர்ந்த ஒருவரிடம் கடன் வாங்கி மொத்தம் “நூறு”ரூபாய் சில்லறையை முருகேசனிடம் கொடுத்தார். அந்த பணத்தை வாங்குவதற்கு அவனுக்கு கை வந்தாலும் மனம் வரவில்லை. மனதிற்குள் ஒரு போராட்டம்; அடிதடி; தள்ளுமுள்ளு; இருந்தும் தன் கண்ணீரை மன்னிப்பாக கொடுத்துவிட்டு கை நடுக்கத்துடன் அந்த பணத்தை வாங்கிக் கொண்டு வேகமாக மெடிக்கல் ஷாப்பை நோக்கி ஓடினான். அங்கு அந்த பணத்தை வைத்துவிட்டு பொருளை வாங்கிக் கொண்டு தன் மகளிடம் ஓடி வந்தான். வந்து பார்த்தால் அந்த மஞ்சள் துண்டு செந்நிற துண்டாக இருந்தது.அவளின் மூடிய கண் திறக்கவில்லை.
முருகேசன் அவளை எழுப்பி தான் வாங்கி வந்த மாத்திரையை அவளிடம் கொடுத்து முழுங்க செய்தான்.
திவ்யாவின் வலி மெல்ல நிதானம் அடைய தொடங்கியது. அவள் அணிந்திருந்த பாவாடை முழுவதும் ரத்தக்கரையாக இருந்தது.
அதை பார்த்த முருகேசன் காலண்டரில் இருந்தஅம்மனை நோக்கி கண்ணீர் விட்டான்; அப்போது முருகேசனுடன் சேர்ந்து அந்த கடும்வெயிலும் கண்ணீர் சிந்தியது. திவ்யாவின் ரத்தக்கரை கரைய ஆரம்பித்தது. தன்மேல் விழும் மழைத்துளி தன் ஆயுளை குறைக்கும் என எண்ணி, மக்கள் அனைவரும் தடா புடால் என கடைகளின் ஓரத்தில் பதுங்க ஆரம்பித்தனர். கடல் போல் இருந்த கூட்டம் சற்று நேரத்தில் காணாமல் போய்விட்டது.
அந்த மழையில் நனைந்து கொண்டே முருகேசன் அம்மனை பார்த்து சிரித்தான். அம்மனும் அவனைப் பார்த்து சிரித்தாள். பிறகு அவன் திவ்யாவை தன் தோளில் மீது போட்டுக்கொண்டு நடக்க ஆரம்பித்தான். அந்த நேரத்தில் மக்கள் அனைவருக்கும் இவர்கள் வேடிக்கை பொருளாக காட்சியளித்தனர்.
அப்போது அந்தப் பார்வை இல்லாதவரிடம் ஒரு முதியவர் “இந்த ரூபாய் கிழிந்திருந்தது என்று தெரிந்தும் ஏன் அவரிடம் இருந்து வாங்கினீர்கள்”? என்று கேள்வி கேட்டார்.
அதற்கு அவர் சிரித்துக் கொண்டே "எனக்குப் பார்வை இல்லை என்று தெரிந்தும் என்னை யாராவது ஏமாற்ற நினைப்பார்களா,அப்படி தெரிந்தும் என்னை ஏமாற்ற நினைத்தால் அவருக்கு எவ்வளவு பெரிய கஷ்டம் இருக்கக்கூடும். அவருடைய கஷ்ட நேரத்தில் கூட நான் அவருக்கு என்னால் முடிந்த உதவி கூட செய்யவில்லை என்றால் நான் மனிதனாக இருந்தும் பலன் இல்லை" என்றார். அப்போது அந்த முதியவர் பக்கத்தில் அந்த ‘மெடிக்கல் கடை’உரிமையாளரும் நின்று கொண்டிருந்தார். அவர் சொன்னதைக் கேட்டதும் அந்த மெடிக்கல் கடை உரிமையாளரின் மனம் உடைய ஆரம்பித்தது. முருகேசன் திவ்யாவை தன் தோளில் மீது வைத்து நடந்து கொண்டு போய்க்கொண்டிருந்ததை மக்கள் அனைவரும் மழையில் ஓரமாக நின்று கவனித்துக் கொண்டிருந்தனர். அதை மெடிக்கல் ஷாப் உரிமையாளரும் கவனித்தார். பிறகு அவனிடம் இருந்து வாங்கிய காசை திரும்ப கொடுப்பதற்காக முருகேசனின் அருகில் ஓடி வந்தார். அப்போது முருகேசனின் அருகில் ஒரு ஆட்டோ வந்து நின்றது. முருகேசன் ஆட்டோவில் ஏறி சென்று விட்டான்.மழையும் தன் கண்ணீரை நிறுத்தியது.
About the WRITER
NaveenKumar Surulivel
ABOVE PHOTOGRAPH WILL BE USED FOR
THE PARTICIPATION CERTIFICATE.
bottom of page